Devaram

பஞ்சபுராணங்கள்
தேவாரம்
பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டமில்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே!
திருவாசகம்
பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
    பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
    உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
    செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவ தினியே!
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
    உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
    சித்தத்துள் தித்திக்குந் தேனே
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
    அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
    தொண்டனேன் விளம்புமா விளம்பே!
திருப்பல்லாண்டு
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
    பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
    மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
    பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
    பல்லாண்டு கூறுதுமே!
புராணம்
உலகெலாம் உணர்ந்து 
ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய
நீர்மலி வேணியன்
அலகில் சோதியன்
அம்பலத்து ஆடுவான் 
மலர் சிலம்படி
வாழ்த்தி வணங்குவாம்!
தேவாரம்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே!
திருவாசகம்
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரை
    யார்கழற்குஎன்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி
    வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய
    போற்றியென்னும்
கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக்
    கண்டுகொள்ளே!
திருவிசைப்பா 
நீறணி பவளக் குன்றமே நின்ற
நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே
வேறணி புவன போகமே யோக
வெள்ளமே மேருவில் வீரா
ஆறணி சடைஎம் அற்புதக் கூத்தா
அம்பொன்செய் அம்பலத் தரசே
ஏறணி கொடிஎம் ஈசனே உன்னைத்
தொண்டனேன் இசையுமா றிசையே!
திருப்பல்லாண்டு
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத்துள்ளே புகுந்து
புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன்
அடியோமுக் கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்பல்லாண்டு கூறுதுமே!
புராணம்
கற்பனை கடந்த சோதி
   கருணையே யுருவ மாகி
அற்புதக் கோல நீடி
   யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந் 
    திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற
   பூங்கழல் போற்றி போற்றி!
தேவாரம்
மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப்
புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல்
ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் 
 களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்

கண்டறி யாதன கண்டேன்!
திருவாசகம்
வானாகி மண்ணாகி வளியாகி
    ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய்
    இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதென் றவரவரைக்
    கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி
    வாழ்த்துவனே!

திருவிசைப்பா
ஏகநா யகனை இமையவர்க் கரசை
    என்னுயிர்க் கமுதினை எதிர்இல்
போகநா யகனைப் புயல்வணற் கருளிப்
    பொன்னெடுஞ் சிவிகையா ஊர்ந்த
மேகநா யகனை மிகுதிரு வீழி
    மிழலைவிண் ணிழிசெழுங் கோயில்
யோகநா யகனை யன்றிமற் றொன்றும்
    உண்டென உணர்கிலேன் யானே!
திருப்பல்லாண்டு
மிண்டு மனத்தவர் போமின்கள் 
மெய்யடியார்கள் விரைந்து வம்மின் 
கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு
ஆட் செய்மின் குழாம் புகுந்து
அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர்
ஆனந்த வெள்ளப் பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள்
என்றே பல்லாண்டு கூறுதுமே!
புராணம்
ஆதியாய் நடுவு மாகி
   அளவிலா அளவும் ஆகிச்
சோதியா யுணர்வு மாகித்
   தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப்
   பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப்
   பொதுநடம் போற்றி போற்றி!
தேவாரம்
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் 
இன்பமே எந்நாளுந்  துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடியிணையே
குறுகி னோமே!
திருவாசகம்
சிந்தனைநின் றனக்காக்கி நாயி னேன்றன்
    கண்ணிணைநின் திருப்பாதப் போதுக் காக்கி
வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன்
    மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்கள் ஆர
வந்தனைஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை
    மாலமுதப் பெருங்கடலே மலையே உன்னைத்
தந்தனை செந்தாமரைக்கா டனைய மேனித்
    தனிச்சுடரே இரண்டுமி
னித் தனிய னேற்கே!
திருவிசைப்பா
ற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
    கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
    மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
    திருவீழி மிழலைவீற் றிருந்த
கொற்றவன் றன்னைக் கண்டுகண் டுள்ளம்
    குளிரஎன் கண்குளிர்ந் தனவே!
திருப்பல்லாண்டு
குழலொலி யாழொலி கூத்தொலி 
ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணளவும் சென்று 
விம்மி மிகுதிரு ஆருரின்
மழவிடை யாற்கு வழிவழி யாளாய் 
மணஞ்செய் குடிப்பிறந்த
பழஅடி யாரொடுங் கூடி எம்மானுக்கே 
பல்லாண்டு கூறுதுமே!
புராணம்
ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே ஆக
இந்துவாழ் சடையான் ஆடும்ஆனந்த
எல்லையில் தனிப்பெருங்கூத்தின்
வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்!
திருப்புகழ்
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
திருப்புகழ்
இறவாமற் பிறவாமல் எனையாள் சற்குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா
கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே!
வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *