பத்தூர் புக்கு இரந்துண்டு பல பதிகம் பாடிப் பாவையரைக் கிறி பேசிப் படிறாடித் திரிவீர் செத்தார் தம் எலும்பணிந்து சேவேறித் திரிவிர் செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கொரு நாள் இரங்கீர் முத்தாரம் இலங்கி மிளிர் மணி வயிரக் கோவை அவை பூணத் தந்தருளீர் மெய்க்கினிதா நாறும் கத்தூரி கமழ் சாந்து பணித்தருள வேண்டும் கடல் நாகைக் காரோணம் மேவியிருந்தீரே.
ஞானத்திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார் மேல் ஊனத்திரளை நீக்கும் அதுவும் உண்மைப்பொருள் போலும் ஏனத்திரளோடு இனமான் கரடி இழியும் இரவின் கண் ஆனைத்திரள் வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப் பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே