Thurka

துர்க்கா

புகழ்பெற்ற தமிழ்த் தெய்வம் ஆகும். துர்க்கை என்னும் சொல்லுக்கு வடமொழியில் ‘வெல்லமுடியாதவள்’ என்று பொருள் தமிழில் வெற்றிக்கு உரியவள். அன்னை துர்க்கைக்கு பல்வேறுபட்ட புராணக் கதைகள் உள்ள போதும் மகிடாசுரனாம் மேதியவுணனை அழிக்கவே அவள் தோன்றியதாகச் சொல்லப்படுகின்றது. அதனால் அவள் மகிடாசுரமர்த்தினி அல்லது மேதியவுணன் கொல்பாவை என்றும் அழைக்கப்படுவதுண்டு.

மகிஷன் என்ற கொடிய அசுரன்  தனது கொடுமைகளால் உலகங்களைக் கலங்க வைத்தான். பூவுலகத்து மக்களையும், தேவ உலகில் வாழும் தேவர்களையும் தனக்கு அடிமைகளாக்கினான். தேவர்களின் அரசனாகிய இந்திரனை விரட்டி விட்டுத் தானே அவனது சிங்காசனத்தில் அமர்ந்து, மிகவும் கொடிய விதத்தில் ஆட்சியை நடத்தினான்.

அவனை வெல்ல எவராலும் முடியவில்லை. பிரம்மாவின் தலைமையில், தே வர்கள் திரண்டு சென்று, சிவபெருமானிடமும், மகாவிஷ்ணுவிடமும் முறையிட்டு அழுதார்கள்.

மகிஷாசுரனது கொடுமைகளைக் கேள்விப்பட்டபோது, சிவனும், விஷ்ணுவும் அடக்க முடியாத கோபம் கொண்டார்கள். அந்தக் கோபம் ஒரு கோடி சூரியர்களின் பிரகாசத்துடன் சகல உலகங்களிலும் பரவியது. அதன்பின், அந்த ஒளி ஓர் அழகிய பெண்ணாக உருவெடுத்தது. அவளே துர்க்காதேவி.

ஒளியிலிருந்து பிறந்த அந்தத் தேவிக்குத் தேவர்கள் பட்டாடைகளையும், தங்க நகைகளையும் வழங்கினார்கள். இமயமலையின் தெய்வமான இமவான், துர்க்காதேவிக்கு, வீரம் நிறைந்த சிங்கத்தை வாகனமாகக் கொடுத்தான்.

துர்க்கா தேவி தனது ஆயிரம் கைகளிலும் ஆயிரம் வகையான ஆயுதங்களை ஏந்தி, மகிஷனைப் போருக்கு அழைத்தாள். மகிஷன் பலவிதமான மாய உருவங்களை எடுத்து அன்னையுடன் போராடினான். உக்கிரமான சண்டை நடந்தது. இறுதியில், துர்க்கையின் வாள் அவனது உயிரைக் குடித்தது.

அவளது திரிசூலம் அவனது உடலில் பாய்ந்தது. கொடுமை ஒழிந்தது. நல்லவர்கள் யாவரும் நலமடைந்து மகிழ்ந்தார்கள். தங்களைக் காத்து ரட்சித்த அன்னையைப் போற்றிக் கொண்டாடினார்கள். இதுதான் துர்க்கா பூஜையின் வரலாறு. தீமைகள் ஒழிந்து, நன்மைகள் ஓங்கிய கதை இது.

புரட்டாசி மாதத்து அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறையில் தொடங்கிப் பத்து நாட்கள் துர்க்கா பூஜை கொண்டாடப்படுகின்றது. இந்தப் பத்து நாட்களிலும், மக்கள் ஒன்று சேர்ந்து அன்னையின் அழகிய உருவங்களைச் செய்து, ஊரெங்கும் வைப்பார்கள். பெரிய பாத்திரங்களில் சுவையான விருந்து படைத்து அனைவர்க்கும் வழங்கி மகிழ்வார்கள்.

அனைவரும் புத்தாடை அணிவார்கள். ஏழைகளுக்கும் புத்தாடைகளை வழங்குவார்கள். யாவரும் தேவியைப் போற்றி மகிழ்ச்சியுடன் தெருவெங்கும் வலம் வருவார்கள். தேவியின் திருவிளையாடல்களை விளக்கும் நாடகங்களையும், நடனங்களையும் நடத்துவார்கள்.

முதல் ஒன்பது நாட்கள் இவ்வாறு மகிழ்ச்சியுடன் பூஜைகள் செய்து, விருந்து உண்டு, விழாக் கொண்டாடியபின், பத்தாம் நாள், அன்னையின் திரு உருவச் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, கடல், ஆறு முதலிய நீர்நிலைகளில் கரைத்து விடுவார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *