பூவொடு நீர்சுமந்து ஏத்தி!
அன்பு செலுத்துவதற்கு ஒர் உருவம் அவசியம் என்பதைக் கண்டு காட்டியவர் காரைக்கால் அம்மையார் ஆவார். சங்கமருவிய காலத்துடன் தோற்றம் பெற்ற இந்துசமயச் சுருவவழிபாட்டு இறைவணக்கத்தில் ஆண்டவனை வழிபடுவதற்குப் பூவும், நீருமே மூலாதாரம் என்று காரைக்கால் அம்மையார் தனது பாடல்களில் குறிப்பிட்டதை அதன்பின்வந்த சமயகுரவர்களும் (அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்) கடைப்பிடித்தார்கள் என்பதை அவர்களிது பாடல்களில் இருந்தே நாம் பார்க்கலாம். ஒருவனுக்குப் புண்ணியம் என்பது பலவழிகளில் வந்து சேரும். போதொடு நீர் சுமந்தேத்தி என்பதன் ஊடாக இறைவனுக்குப் பணம் செலவழித்து படைத்துத்தான் இறைவனின் அன்பையும், ஆசியையும் பெறவேண்டும் என்பதல்ல. ஐம்பூதங்களிலிருந்து பெறப்படும் பூவும், நீரும் வசதிகள் அற்றவர்களுக்குக்கூட வழிபாட்டுப் பொருட்களாக இலகுவாகக் கிடைத்துவிடும். இறைவனிடத்தில் அன்பை வெளிப்படுத்தி ஆன்மீகத்தை வளர்க்க வேண்டுமே தவிர உங்கள் ஆசையை வெளிப்படுத்தி அவனிடம் பொருட்களைக் கேட்பது பக்தியின் வெளிப்பாடு அல்ல. ஒரு ஆண்டிக்குப் படைத்துப் பாருங்கள் அது உங்கள் புண்ணியமாக அது இறைவனுக்குப் போய்ச் சேரும். இறைவனுக்குப் படைத்துப் பாருங்கள் அது ஆண்டிக்குப் போய்ச் சேராது என்று கிருபானந்த வாரியார் அவர்கள் அதன் உண்மை நிலையைக் கூறுகின்றார்கள். இதை மையப்படுத்துவதற்காகவே பூவுடன் நீர் சேர்த்து வழிவடுப வர்களுக்கே தலையாய பயன்கள் கிட்டும் என்று திருமந்திரத்தை அருளிய திருமூலர் சொல்லும்போது
‘புண்ணியம் செய்வார்க்குப் பூ உண்டு’ என்கின்றார்.
இக்கருத்தையே திருஞானசம்பந்தர் குறிப்பிடும்பொழுது ஏடுடைய மலரால் உனை நாள் பணிந்து ஏத்த அருள்செய்த பீடுடைய பிரமா என்றுகூறுவதோடு மட்டும் நில்லாமல் ‘பூ நாளும் தலைசுமப்ப’ என்று கூறுகின்றார்.
பூக்கை கொண்டரன் பொன்னடி போற்றிலார் என்றும்,
கடி மாமலர் தூவி நின்று என்றும்
சூழ்ந்த மாமலர் தூவித் துதி என்றும்
சமயகுரவருள் ஒருவரான அப்பர் (திருநாவுக்கரசர்) தமது பண்கனிந்த பாடல்களால் இறைவனைப் பூக்களால் போற்றுங்கள் என்றும் பாடுகின்றார். பூமாலை புனைந்து ஏத்தேன் என்றும், செய்கழற் கீழ் விரையார்ந்த மலர்தூவேன்ளூ என்றும். மாணிக் கவாசகர் கூறுகின்றார்.
‘மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து’ என்று அருணகிரிநாதரும், ‘கங்கை(நீர்) கொண்டு மலர்தூவி அங்கமது புளகி’ என்று தாயுமானவரும் தம் பாடல்களில் இறைவனை மலரிட்டு வணங்குதலை மிகவும் சிறந்த நெறி என்று கூறுகி ன்றார்கள்.
இது இவ்வாறிருக்க சிவபெருமான் கல்லால் எறிந்த சாக்கிய நாயனாரையும், வில்லால் அடித்த விஜயனையும், பிரம்பால் அடித்த அரிமத்தன பாண்டியனையும், செருப் பால் உதைத்த கண்ணப்பரையும், உமது உள்ளமிளகி (சங்க காலச்சிலேடை உள்ளமிளகாயோ, ஒரு பேச்சுரைக்காயோ) அருள்புரிந்தீரே. மலர்கள்; சொரிந்து உமைத் தொழுத மன்மதனை ஏன் வதைத்தீர் என்று ஒரு அடியார் சிவனிடம் கேட்கின்றார். அதற்கு இறைவன் மற்றவர்கள் எல்லோரும் என்மீது கரைகடந்த காதலால் அவற்றைச் செய்தார்கள். ஆனால் மன்மதனோ பூச்சொரிந்து என்னை மயக்கும் காரியத்தில் ஈடுபட்டான். மற்றவர்களது செயல் தீதாக இருந்தாலும் எண்ணங்கள் உயர் வாக இருந்தது, மன்மதனின் செயல் உயர்வாக இருந்தாலும் அவரது எண்ணங்கள் அற்பமானது. அதனால்தான் அவனை எரித்தேன் என்று சிவன் கூறி அருளினார்.